பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

நாம் குட்டையை குழப்பாமல் இருந்தாலே போதும்.....
வாழ்கையில் பல பிரச்சனைகள் அதுவாகவே சரியாகிவிடும் .....

சரி செய்கிறேன் என்று நாம் குட்டையை குழப்பாமல் இருந்தாலே  போதும்.....


இந்தக் குட்டிக் கதையை படித்துப் பாருங்களேன்....

நான் சொல்வது சரி என்று நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.....


இந்திரன் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள்....
ஒரு நாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.....அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்....
உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி , இந்தகிளியை எப்படியாவது காப்பாற்றுங்கள்... கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்....
இந்திரன் , கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம் சென்று முறையிடுகிறேன்...ஒவ்வொருவர் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே ? அவரிடம் சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றி எழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு , பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்....
விஷயத்தை கேட்ட பிரம்மா , இந்திரா.... படைப்பது மட்டுமே என் வேலை...உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்...நாம் அவரிடம் சென்று உதவி கேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு மஹாவிஷ்ணுவிடம் சென்று விஷயத்தை தெரிவித்தார்....
மஹாவிஷ்ணுவோ , உயிர்களை காப்பது நான்தான் ...ஆனால் உன் கிளி இறக்கும் தருவாயில்,இருக்கிறது.....அழிக்கும் தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்...வாருங்கள் நானும் உங்களுடன் வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார்....
விபரங்களை கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்...உயிர்களை எடுக்கும் பொறுப்பை நான் எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்...வாருங்கள் ....நாம் அனைவரும் சென்று எமதர்மனிடம் கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்று சொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார்....
தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதை கண்ட எமதர்மன் உடனே எழுது ஓடி வந்து வரவேற்கிறார்..விஷயம் முழுவதையும்கேட்ட அவர் ,ஒவ்வொரு உயிரையும் எந்த நேரத்தில் , . எந்த சூழ் நிலையில் , என்ன கார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்..அந்த ஓலை அறுந்து விழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்....வாருங்கள் அந்த அறைக்குசென்று , கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார்....
இப்படியாக , இந்திரன் ,பிரம்மா ,விஷ்ணு , சிவன் , எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்... ....அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது...உடனே அவர்கள் அவசரமாக சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்..
அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.....அவசரமாக அதைப்படித்து பார்க்கின்றனர்....
அதில்......


இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ , அப்போது இந்த கிளி இறந்துவிடும்..... என்று எழுதப்பட்டிருந்தது!!!!!!!!!!!!!

��

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ப்ரூட் வெஜி நட்டி சாலட்
ப்ரூட் வெஜி  நட்டி சாலட் 

ஜில்லென்ற ,இனிப்பான ப்ரூட் சலட் சாப்பிட்டு இருப்பீர்கள்...

காரட்,வெள்ளரி  தக்காளி போட்ட வெஜிடபிள் சலட் சாப்பிட்டு இருப்பீர்கள்....

இந்த ப்ரூட் வெஜி  நட்டி சாலட்  ஒரு  முறை செய்து ,சாப்பிட்டு பாருங்களேன்...விடமாடீர்கள்....

சாதாரணமாக,வெஜிடபிள் சாலட் என்றாலே டயட்டில் இருப்பவர்களுக்கான "போர் " டிஷ் என்று பலரும் ஒதுக்கி விடுவார்கள்...

மேலும் சிலர்,"நான் என்ன ஆடா ,மாடா .....எல்லாத்தயும்  பச்சையா திங்கணுமா" என்று கடுப்பாவார்கள்...

குழந்தைகள் சலட் என்றாலே காத தூரம் ஓடுவார்கள்...

இவர்கள் அனைவரையும் மயக்க 
ஒரு சுவையான ,ஆரோகியமான  சாலட் ......

தேவையான பொருட்கள் 
வெள்ளரிக்காய்,காரட் ,குடமிளகாய்,தக்காளி.....(தலா ஒன்று )

ஆப்பிள் -1
பச்சை சீட் லெஸ்  திராட்சை -1 கப் 
பேரிச்சை -2

வறுத்து ,தோல் நீக்கிய கடலை -1/2 கப் 
வெள்ளரி விதை (காய்ந்தது )-1 டீஸ்பூன் 
வறுத்த வெள்ளை எள் -1 டீஸ்பூன் 


பச்சை மிளகாய் - 1-2
எலுமிச்சை சாறு -1 டேபிள் ஸ்பூன் 
 உப்பு -தேவையான அளவு 


செய்முறை 


 • காய்,பழங்களை தண்ணீரில் நன்றாக கழுவவும்.
 • காரட்,வெள்ளரிக்காய் ,அப்பிள்  முதலியவற்றை தோல் சீவவும்.
 • பச்சை மிளகாயை  பொடியாக நறுக்கவும்....(இதற்க்கு  கத்தியை விட கத்திரிக் கோல்  கை கொடுக்கும்.)
 • காய் களை பொடிப் பொடியாக அறியவும்.
 • ஆப்பிள் ,பேரிச்சை முதலியவைகளை பொடியாக அறியவும்.
 • நறுக்கிய பொருட்களுடன் ,எலுமிச்சை சாறு ,உப்பு,கடலை,எள் ,வெள்ளரி விதை,திராட்சை சேர்த்து நன்றாக கலக்கவும்.
 • இதை ஒரு சூப் பௌல்  நிறைய சாப்பிட்டு வர ஒரு நாளின் காய்/பழ தேவையை கணிசமாக ஈடு செய்யும்...
 • உங்கள் இஷ்டம் போல இதில், சிறிது கோஸ் , கொஞ்சம் முள்ளங்கி,ஒரு உதிர்த்த மாதுளை,அல்லது சிறிது வால் நட் ,கிஸ்மிஸ்  என்று கலந்து மாறுதல் செய்யலாம்.
 • சாதாரணமாக  இதை காலை உணவுடன் சாப்பிடலாம்.மாலை டிப்பன் வேளையில்  முழு ஆகாரமாக உண்ணலாம்.
 • கடலை,எள்ளு முதலியவைகள் சேருவதால் புரதச்சத்து மிகுந்த சாலடும் கூட....
 • மதிய ,இரவு உணவுடனும் பரிமாறலாம்.


 • கூடிய வரை எளிதில் கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு சுலபமாக செய்யப்படும் சாலட்  இது....

செவ்வாய், 28 ஜூலை, 2015

வேலூர்-தெரிந்த ,தெரியாத தகவல்கள்

வேலூர்...தெரிந்த ,தெரியாத தகவல்கள் 
தென்னிந்தியாவின் மிக வெப்பமான நகரம். சுற்றிலும் கிழக்கு மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள நகரம். தமிழகத்தின் ஏழாவது பெரிய மாநகரம். மிகப் பெரும் சிறைச்சாலைகளைக் கொண்ட நகரம். தெற்காசியாவின் மிகப்பெரும் மருத்துவமனை உடைய நகரம். ஒரு மாநகராட்சியையும், ஆறு நகராட்சிகளையும் சுமார் 1 இலட்சம் மக்கள் தொகையையும் கொண்ட நகரம். தோல் பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் இரண்டாமிடத்தையும் பெற்ற நகரம். ஒரே ஊரில் மூன்று மலைக் கோட்டைகளையும் ஒரு தரைக் கோட்டையையும் உடைய நகரம். இது மட்டும்தானா?
வானளாவிய கற்களாலான மதிற்சுவர்கள். கண்களை மலைக்க வைக்கும் சுற்றளவு. ஒரு கோட்டைக்குள் மற்றொரு கோட்டை போல் மூன்று கொத்தளங்கள். பல நூற்றாண்டு காலமாக அசையாமல் நிற்கும் உறுதி. பல போர்களைக் கண்டு சளைத்து போன மனம். இப்படியெல்லாம் இருப்பது வேலூர் மாநகரம் ஒன்றுதான்.
வேலூர்க் கோட்டை :
திம்மி ரெட்டி, பொம்மி ரெட்டி சகோதரர்களால் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட வேலூர் கோட்டைதான் அது. தென்னிந்தியாவிலேயே மிகச் சிறந்த போர் அரண்களுடன் கட்டப்பட்ட கோட்டை இது. விஜயநகரப் பேரரசின் வேலூர் மண்டலப் பகுதிகளுக்கான பாதுகாப்பு அரணாக இது வேலூரில் கட்டப்பட்டது. அது மட்டுமல்ல. ராட்சசி - தங்கடிப் போரில் அதாவது தலைக்கோட்டைப் போரில் விஜயநகரம் வீழ்ந்த பின் அப்பேரரசின் அரசர்கள் முறையே தங்கள் தலைநகர்களை பெனுகொண்டா, சந்திரகிரி மற்றும் வேலூரில் அமைத்துக் கொண்டனர். இக்கோட்டை சுமார் நூறாண்டு காலம், பேரரசின் இறுதி அரசரான மூன்றாம் அரங்கனின் காலம் வரை தலைநகரக் கோட்டையாக இருந்தது. சுற்றிலும் பாதுகாப்பு அரணாக சுமார் 64 அடி ஆழம் கொண்ட அகழியும், மரப்பாலமும் உயிரைக் கொல்லும் முதலைகளும் கொண்டு விளங்கியதாம் இக்கோட்டை. ஆனால் பற்பல போர்களைக் கண்ட கோட்டையின் அகழி தற்போது ஒரு புறத்தில் தூர்ந்து விட்டது. ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் நிரம்பி உள்ளது.
பொதுவாகவே கோட்டைகளுக்குப் பெயர் வைப்பது தமிழகத்தில் வழக்கமில்லை. கோட்டைகள் இருக்கும் ஊரின் பெயரோ பகுதியின் பெயரோ வழக்கில் இருப்பது கண்கூடு. எடுத்துக் காட்டாக மலையில் இருப்பது மலைக்கோட்டை. புதிதாகக் கட்டப்படுவது புதுக்கோட்டை என்றெல்லாம் கூறலாம். ஆனால் இக்கோட்டைக்கு ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அது வெயிலுக்குப் பேர் போன வேலூரில் வெயிற்காலத்தில் மட்டுமே தெரியும் வண்ணம் கோட்டை மதிலில் பொறிக்கப்பட்டுள்ளது. கோட்டையின் மேற்குப் பகுதியில் நீருக்கடியில் தமிழிலும், கன்னடத்திலும் மீசுரகண்டக் கொத்தளம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை வேனிற்காலத்தில் காண முடியும்.
இக்கோட்டைக்குள் சுமார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேசுவரர் அல்லது ஜக்ஷரகரேசுவரர் கோவில் உள்ளது. இந்து அரசர்களின் ஆட்சி முடிந்து இசுலாமிய நவாபுகளின் ஆட்சி தொடங்கிய பின்பு 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதியும் உள்ளது. பின் வெள்ளையர்களின் ஆட்சியில் 1806-ல் கட்டப்பட்ட கிறித்தவ தேவாலயமும் உள்ளது. இக்கோட்டையை மும்மதச் சந்திப்பு என்றே கூறலாம்.
மேலும் திப்பு மகால், ஐதர் மகால் என்றழைக்கப்படும் அரண்மனைகளும், பாத்தி மகால், பேகம் மகால் என்று கூறப்படும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையைப் போன்ற தூண்களைக் கொண்ட இரு அரசவை மண்டபங்களும் உளளன. ஆனால் பண்டைய மன்னர் ஆட்சியின் சுவடுகள் ஏதும் தெரியா வண்ணம் உள்ளிருந்த அனைத்துப் பகுதிகளும் அரசு அலுவலகங்களாக மாற்றப்பட்டிருந்தன. கோவிலுக்குரிய தெப்பக்குளம் காவலர் பயிற்சிப் பள்ளியின் மைதானமாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இங்கு பல்துறை அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
தற்போது மாநில அரசின் தொல்பொருள் அருங்காட்சியகம், மத்தியத் தொல்பொருள் துறையின் அருங்காட்சியகம், திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் ஒருபிரிவு ஆகியன நடைபெற்று வருகின்றன.
அகழியில் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ள படகு சவாரி நடக்கின்றது. மாலை நேரத்தில் அலங்கார ஒளிவிளக்குகள் வீச கோட்டை காட்சி தருகின்றது. ஜலகண்டேசுவரர் கோவில் திருவிழாக்கள், சித்திரை மாத புஷ்பப் பல்லக்கு, சுற்றிப் பார்ப்பதற்கு வரும் மக்கள் கூட்டம் எப்போதும் கோட்டையைக் கலகலப்பாக்குகின்றது. நகரைச் சுற்றியுள்ள மலைச்சிகரங்களில் கட்டப்பட்டுள்ள சுக்ரோவ், சஜரோவ் முதலான மூன்று கோட்டைகளைப் பார்த்தபடி தன் பழம் பெருமைகளை நினைத்தபடி அண்ணாந்து நிற்கின்றது இந்த மீசுரக் கண்டக் கொத்தளம்.

திங்கள், 20 ஜூலை, 2015

கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!!
ஒரு கேரட்டில், நாள் ஒன்றுக்கு தேவைப்படும் சத்துக்கள் எவ்வளவு இருக்கிறது  தெரியுமா?
விட்டமின்-A சத்துக்கள் 210% உள்ளது.
விட்டமின் கே 10% உள்ளது.
விட்டமின் சி 6% உள்ளது.
கால்சியம் 2% உள்ளது.


- கேரட்டின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!:
- கண் பார்வையை மேம்படுத்தும்.
- புற்றுநோய் வராமல் தடுக்கும் குணம் கேரட்டுக்கு உள்ளது.
- உடல் செல்களை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.
- தோலை பளபளப்பாக வைத்துக்கொள்ள கேரட் உதவும்.
- நோய் தொற்றுக்களில் இருந்து உடலை காப்பாற்றும் ஆன்டிசெப்டிக்காகவும் கேரட் பயன்படுகிறது.
- இதயம் தொடர்பான நோய்களில் இருந்தும் கேரட் காப்பாற்றக்கூடியது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
- உடலில் சேரும் நச்சு பொருட்களை அகற்றும் வல்லமை கேரட்டுக்கு உண்டு.
- சொத்தை பல் வரவிடாமல் தடுக்கும் தன்மையும் கேரட்டுக்கு உள்ளது.
- வாரத்துக்கு ஆறு கேரட்டாவது சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவு என்கிறது ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆய்வு.

- என்ன.. கேரட்ட தேடி கிச்சனுக்கு போறீங்களா.. வாழ்த்துக்கள்!

செவ்வாய், 14 ஜூலை, 2015

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான / அவசியமான தொடர்பு எண்கள்


நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,
செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
போலீஸ் SMS :- —————————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155

திங்கள், 13 ஜூலை, 2015

வெஜிடபுள் கட்லெட்
வெஜிடபுள் கட்லெட் .....

தேவையான பொருட்கள் 


 • உருளைக்கிழங்கு -2-3
 • வெங்காயம்-2
 • காரட் -1
 • பச்சை பட்டாணி -1/2 கப் 
 • ரொட்டி -3 ஸ்லிஸ் 
 • உடைத்த முந்திரி -1 டீஸ்பூன் 
 • சீரகம்-1/2 டீஸ்பூன் 
 • மிளகாய் தூள் -2 டீஸ்பூன் 
 • கரம் மசாலா தூள் -1 டீஸ்பூன் 
 • ரொட்டித்தூள் -தேவையான அளவு 
 • கார்ன் ப்ளோர் (வெள்ளை சோள மாவு)-2 டேபிள் ஸ்பூன் 
 • உப்பு - தேவையான அளவு 
 • எண்ணை -தேவையான அளவு 
செய்முறை 

 • வெங்காயத்தை பொடியாக அறிந்துகொள்ளவும் .
 • உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும்.
 • அரிந்த காரட் ,பச்சை பட்டாணி ,ஆகியவற்றை வேக வைத்து வடித்துக்கொள்ளவும்.
 • வாணலியில் சிறிது எண்ணையை காய வைத்து அதில் சீரகத்தை பொரிக்கவும்.
 • இதில் அறிந்த வேங்காயத்தை  வதக்கவும்.
 • இதில் வெந்த காய்கறிகள் ,முந்திரி ,மசாலா தூள்,உப்பு,காரம் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.
 • இதில் ரொட்டியை சிறிய துண்டுகளாக பிய்த்துப் போட்டு நன்றாக் கிளறி இறக்கி வைக்கவும்.
 • சோள மாவை தண்ணீரில் கொஞ்சம் தளர்வான பதத்தில் கரைக்கவும்.(நீர்த தோசை மாவு பதம்)
 • காய்கறிக் கலவையை வடைகள் போல தட்டிக் கொள்ளவும் .
 • அதை சோள மாவு கரைசலில் முக்கி எடுத்து ரொட்டித் தூளில் புரட்டியெடுத்து சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
 • தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.

இந்தக்காய் களுடன்  காலி பிளவர் ,பீன்ஸ் ,நூல்கோல் போன்றவைகளும் சேர்க்கலாம் 

திங்கள், 6 ஜூலை, 2015

கோயம்புத்தூரின் பல இடங்களின் பெயர் எப்படி வந்தது?

கோயம்புத்தூரின் பல இடங்களின் பெயர் எப்படி வந்தது என்ற சுவாரசியமான தகவல்களை காண்போம்.


ஒப்பணக்கார வீதி :
விஜயநகர பேரரசில் சேனைகளில் வேலை பார்த்த பலிஜா சமூகத்தினர் பணம் ஒப்புவிக்கும் ( பணம் பட்டுவாடா) பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.அவர்கள்தான் இந்த பெயருக்கு காரணமான ஒப்பணக்காரனர்கள். பணத்தை ஒப்புவிக்கும் பலிஜா சமூகத்தினர் குடியேறியதால் ஒப்பணக்கார வீதி என்ற பெயர் வந்தது.

R.S புரம் :
1903ல் கோவையில் வேகமாகப் பரவிய பிளேக் நோயால் ஏரளமான உயிர்பலிகள் நிகழ்தன. எண்ணற்றோர் தங்கள் இருப்பிடங்களை காலி செய்து இடம் மாறினர்.மேலும்,மக்கள் நெருக்கம் மிகுந்த நகரில் சுகாதாரக் குறைபாடுகள் அதிகம் இருந்தது.எனவே நகரை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.அப்போது மேட்டுபாளையம் ரோடு மற்றும் தடாகம் ரோடுக்கு இடையே இருந்த பல நூறு ஏக்கர் நிலத்தை வாங்கிய நகரசபை நிர்வாகம் அதை மனைகளாகப் பிரித்தது.பின் அப்பகுதிக்கு கோவை நகராட்சி மன்றத் தலைவராக இருந்த இரத்தினசபாபதி முதலியாரின் பெயர் வைக் கபட்டது.ரத்தின சபாபதிபுரம் என்னும் பெயர் சுருங்கி ஆர்.எஸ்.புறம் என்று ஆயிற்று.

சபர்பன் ஸ்கூல்:
பிளேக் நோய் காரணமாக நகரம் விரிவாக்கப்பட்டபோது ஆர்.எஸ்.புறம்,கெம்பட்டி காலனி,தேவாங்கப் பேட்டை உள்ளிட்ட புற நகரங்கள் உருவாக்கப் பட்டன.அந்த நாளில் பிராமணர்களுக்காக உருவாகப்பட்ட ராம்நகரும் கூட ஒரு புறநகரமே. அந்த புற நகரில் ஏற்படுத்தபட்ட பள்ளி என்பதால் சப்-அர்பன் பள்ளி என்று அழைக்கபட்டது.அது மருவி சபர்பன் பள்ளியாயிற்று.

சுக்கிரவார் பேட்டை& தேவாங்க பேட்டை:
கன்னடம் மற்றும் தெலுங்கில் "சுக்கிர வராம்" என்றால் வெள்ளிக்கிழமை என்று பொருள்.கடைகள் நிறைந்த வியாபாரப் பகுதியை "பேட்டை" என்பார்கள். அன்றைய நாளில் வெள்ளிக்கிழமை தோறும் சந்தை கூடிய இடத்திருக்கு பெயர்தான் சுக்கிரவார் பேட்டை. தேவாங்க செட்டியார் அதிகம் வசித்த பகுதியில் நெசவுத் தொழிலும் புகழ் பெற்று விளங்கியதால் தேவாங்கப் பேட்டை ஆயிற்று.
டவுன்ஹால் :
விக்டோரியா ராணி பதவியேற்று 50 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டும் வகையில் 1887ல் கோவை நகராட்சியின் மையப்பகுதியில் நகர மண்டபம் ஓன்று கட்டப்பட்டது. 1892 இல் திறக்கப்பட்ட அந்த மண்டபம் இருந்த இடம்தான் டவுன்ஹால் என்று அழைக்கப்பட்டது.


கோட்டை மேடு :
டவுன்ஹால்க்கு பின்புறம் கோட்டை இருந்தது.பிரிட்டிஷ் மற்றும் மைசூர் படைகளுக்கு இடையே நடந்த யுத்தத்தில் சிக்கி அந்தக் கோட்டை சின்னபின்னமானது.1792ல் திப்புவின் உத்தரவின் பேரில் இந்த கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது.அந்த கோட்டை இருந்த இடம்தான் இன்றைய கோட்டை மேடு.


ராஜா வீதி :
ஆசிரியர்ப் பயிற்சி பள்ளியும்,பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இயங்கும் கட்டடம்தான் அன்றைய மதோராஜா மஹால்.மைசூர் அரசின் அதிகாரியான அந்த மதோராஜா,அந்த வீதியில் குடியிருந்து ஆட்சி செலுத்தியதால் அந்த வீதிக்கு ராஜாவீதி என்று பெயர்.


காட்டூர் :
அவினாசி ரோடு மேம்பாலம் முதல் வட கோவை சிந்தாமணி வரையில் முன்பொரு காலத்தில் பனங்காட்டுக் குளம் என்ற குளம் இருந்தது.நாளிடைவில் அந்த குளம் அழிய,குளமிருந்த இடத்தில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டன.நாளிடைவில் பனை மரங்கள் நிறைந்த காடாக மாறியதால் பனங்காட்டூர் என்றாயிற்று. நாளிடைவில் அது மருவி காட்டூர் என்றாயிற்று.
இன்றைய Brookfields mall  இருக்கும் தெரு ஒரு காலத்தில் பனங்காட்டு  ரோடு  என்று அழைக்கப்பட்டது...